வரிஞ்சிப்பாக்கம் என் கிராமம் என் அடையாளம்


வணக்கம் நண்பர்களே,


என் கிராமத்தை பற்றிய பதிவை இந்த பக்கத்தில் உங்களுக்காக,



வரிஞ்சிப்பாக்கம் -607205 கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியை தாலுகாவாகவும், அண்ணா கிராமத்தை ஒன்றியமாக கொண்ட ஒரு சிறு கிராமம்.


வரிஞ்சிப்பாக்கம் மற்றும் கொசப்பாளையம் ஆகிய சிற்றூர்கள் வரிஞ்சிப்பாக்கம் கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகின்றன..


பண்ருட்டியிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் மூன்று புறம் விவசாய நிலத்தையும் ஒரு புறம் மலட்டாற்றங்கரையாலும் சூழப்பட்டது வரிஞ்சிப்பாக்கம் கிராமம்,


பனப்பாக்கம், சின்னப்பேட்டை, பூண்டி என்ற கிராமங்களுக்கு நடுவில் உள்ளது வரிஞ்சிப்பாக்கம்.


முன்காலத்தில் வஞ்சி மாநகர் என்று அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி வரிஞ்சிப்பாக்கம் என்றானது, பாக்கம் என்று முடியும் கிராமம் பெரும்பாலும் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களும் நடைபெறும் என்பர்..


15ஆம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 849 பேர் வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தின் வசிக்கின்றனர், மொத்த மக்கள் தொகை அதில் 438 ஆண்களும், 411 பெண்களும் என கணக்கிடப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி:
 

வரிஞ்சிப்பாக்கத்திற்கு என்று தனி அஞ்சல் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நூலகம், நியாய விலை கடை, கூட்டுறவு பாலகம் போன்ற அடிப்படை அலுவலகங்கள் அமைந்துள்ளது..


விவசாயம்:

சில ஆண்டுகளுக்கு முன் கரும்பு பயிர் மட்டுமே விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த நிலையில் கரும்புக்கு சரியான விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகளால் கொய்யா பயிரிடத்தொடங்கினர்.


வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தில் கரும்பு, கொய்யா, நெல், மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை என அனைத்து பயிர் வகைகளும் சாகுபடி செய்து பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது.


கொய்யா வியாபாரிகளால் சில்லறையாகவும், மொத்தமாகவும் சிதம்பரம், வடலூர், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, சென்னை என பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.



கோவில்கள்:

     வரிஞ்சிப்பாக்கம் என்ற இந்த சிறு கிராமத்தில் கோவில்களின் எண்ணிக்கை சற்றே அதிகம்


1.வினாயகர் கோவில்
2.எல்லை மாரியம்மன் கோவில்
3.நவநீதகிருஷ்ணன் கோவில்
4.பாலமுருகன் ஆலயம்
5.அங்காளம்மன் ஆலயம்
6.கமேஸ்வரர் கோவில்
7.ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்
8.அய்யனார் கோவில்
9.வீரன் கோவில்

    

என முக்கிய கோவில்கள் அமைந்துள்ளது.


வைகாசி மாதம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழாவும், மாசி மாதத்தில் அங்காளம்மன் கோயில் திருவிழாவும், பங்குனி மாதத்தில் முருகர்க்கும், மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கு நவநீத கிருஷ்ணன் கோவிலிலும் திருவிழா நடைபெறும்..


நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் நடைபேறும் உரியடி திருவிழாவும், தை மாதம் கரிநாள் அன்று நடைபெறும் பாரி வேட்டை திருவிழா என்பது பிரபலமான திருவிழாவாகும்.


வரிஞ்சிப்பாக்கம் மலட்டாறு:

      

         தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறு தான் மலட்டாறு, இந்து சமுத்திர வாய்க்கால் என்றும் கூறப்படும் மலட்டாத்துக்குக்கு பாசன நீர் திறந்தால் பில்லூர், வரிஞ்சிப்பாக்கம், சின்னப்பேடடை, பூண்டி ,கட்டமுத்துப்பாளையம் போன்ற கிராமங்கள் நீர் ஆதாரம் பெறுவர்.


      நண்பகலில் தாயும் குழந்தையும் ஆற்றில் நடந்து வரும் போது வெய்யிலின் தாக்கத்தால் மணலின் சூடு தாங்க முடியாத தாய் மனசாட்சியற்று குழந்தையை கீழே போட்டு குழந்தையின் மீது ஏறி நின்ற தால் மலட்டாறு என பெயரானது என்று ஒரு சிலரால் கூறப்பட்டது.


       மலட்டாறே முதன்மையான தென்பெண்ணை ஆறாக இருந்தது..பின்னாளில் நீரோட்டத்தின் திசை மாறியதால் மலட்டாறு வறண்டது.


திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் பற்றிய சுந்தரரின் இப்பதிகாரம் 7-ம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள வடபால் தென்பெண்ணை ஆறு என்பது தென்பெண்ணை ஆற்றிலிருந்து வடக்கே உள்ள சிஷ்டகுருநாதர் என்பதாகும், அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தென்பெண்ணை ஆறு வரிஞ்சிப்பாக்கம் ஆற்றை குறிக்கிறது


"கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே"


தற்போது இந்த ஆற்றில் பெரும்பகுதி  வனப்பகுதியாக மாறியுள்ளது.


19ம் நூற்றாண்டில் ஏற்றபட்ட வெள்ளம் மிகப்பெரிய சேதராத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, அதன் பின் ஆறு வறண்டது...


20ம் நூற்றாண்டின் சிலரது உழைப்பால் மீண்டும் வரிஞ்சிப்பாக்கம் ஆற்றில் ஓடை போல் நீர் கொண்டுவரப்பட்டது..


இரண்டு வருடங்களுக்கு முன் முதுமக்கள் தாழி ஆற்றில் காண்டேடுக்கப்பட்டது மற்றும் சிவன் கோவில் விளக்கு, தூண் ஒன்று ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு தற்போது முருகர் கோவிலின் வைக்கப்பட்டுள்ளது.



சில புகைப்படங்கள்

எல்லை மாரியம்மன் கோவில்

வினாயகர் கோவில்

நவநீதகிருஷ்ணன் ஆலயம்

அங்காளம்மன் கோயில்
காமேஸ்வரர் கோவில்

Google map link


நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்,


தொகுப்பு : தமிழரசன் சண்முகம்


விடுபட்டவை இருந்தால் கமெண்ட் செய்யவும்...

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads