வணக்கம் நண்பர்களே,
முதலில் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த ஆண்டு வளம் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
நீண்ட நாட்களுக்கு பிறகு என் ஆன்மீக பயண பதிவு உங்களுக்காக என் அனுபவத்தின் தொகுப்பு...
சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படும் 16 மலைகளால் சூழப்பட்ட சதுரகிரி எனும் மகாலிங்க மலையின் மலையேற்றத்தை பற்றிய என் அனுபவ தொகுப்பை வெளியிடுவதில் மகிழ்கின்றேன்...
தமிழகத்தின் மிக சவால் நிறைந்த மலைகளில் முக்கியமான மலையாக சதுரகிரி இடம்பெற்றுள்ளது...பெரும் சவால்கள் நிறைந்த மலைகள்..
1.பொதிகை மலை / அகத்தியர் மலை
2.வெள்ளியங்கிரி மலை.
3.பர்வத மலை.
4.சதுரகிரி மலை
இவற்றை பற்றி என் பயண குறிப்பை இணைத்துள்ளேன்....
சதுரகிரி :
மகாலிங்க மலை, சஞ்சீவிகிரி என்றும் அழைக்கப்படும் சதுரகிரி மலையானது மதுரை மாவட்டத்தில், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூருக்கு அருகில் தாணிப்பாறை எனும் ஊரில் அடிவாரம் கொண்டது மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட மலை, சதுர வடிவில் 16 மலைகளால் சூழப்பட்டது, சுமார் 3500 அடி உயரமுள்ள சதுரகிரியின் உச்சியை அடைய 5.0 கிமீ பயணம் செய்ய வேண்டும்..
சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பு, வனதுர்கை ஆகிய வழிபாட்டுதளங்கள் அமைந்துள்ளது...
பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் சதுரகிரி மலை ஏற பக்தர்களை அனுமதிக்கின்றனர் வனத்துறையினர், மாதத்தில் எட்டு நாட்கள் அதாவது, அமாவாசை, பௌர்ணமியின் முன் பின் நாட்கள் மற்றும் பிரதோஷம் மற்றம் அதன் முந்தைய நாட்கள் என எட்டு நாட்கள் மட்டுமே மலை ஏற அனுமதி உள்ளது...
சதுரகிரி மலையை அடைய பயணிக்க/கடக்க வேண்டிய முக்கிய இடங்கள் :
1.தாணிப்பாறை அடிவாரம்
2.மாங்கனி நீரோடை
3.வழுக்குப் பாறை
4.சங்கிலி பாறை
5.முக்கோணவளைவு
6.காராம் பசுத்தடம்
7.கோரக்கர் குகை
8.இரட்டை லிங்கம்
9.வனதுர்கை கோவில்
10.பச்சரிப்பாறை
11.பிலாவடி கருப்பர் கோவில்
மேலே குறிப்பிட்டுள்ள இடங்களை கடந்த பின்னறே சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தை வழிபட முடியும்...
நான் கேட்டறிந்தவை:
பிலாவடி கருப்பர் கோவில் :
சிவ பெருமான் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த கருப்பசாமி சதுரகிரி-யின் காவல் தெய்வமாக காவலிருந்து வந்தார்.
அதே நேரத்தில் வியாபாரி ஒருவர் சிவபெருமான் மீது கொண்ட ஆர்வத்தால் சிவனுக்கு கோவில் கட்ட ஆசை கொண்டார், ஆனால் கோவில் கட்ட பணம் பற்றாது என அறிந்த அந்த வியாபாரி ஒரு சித்தரிடம் முறையிட அந்த சித்த மூலிகைகளால் பலாமரத்தடியில் தைல கிணறு ஒன்றை உருவாக்கி அந்த கிணற்றை கருப்பசாமியை காவல் இருக்க வைத்தார்... அந்த தைல மூலிகையை உலோகத்தின் மேல் பூசினால் தங்கமாக மாறிவிடுமாம், அந்த உலகத்தை வைத்து வியாபாரி வியாபாரம் செய்து சுயம்பு லிங்கத்தை சுற்றி கோவில் கட்டியதாக சிலரால் கூறப்படுகின்றது...
இரட்டை லிங்கம் :
கணவர் மனைவி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர், அவர்களில் கணவர் சிவன் மீதும், மனைவி விஷ்ணு- வை வணங்கி வந்துள்ளனர்..
ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்களிடையே சிவன் பெரியவரா இல்லை விஷ்ணு பெரியவரா என்ற சண்டை ஆரம்பித்தது, கணவனோ சிவனை பெரியவர் என்றார், மனைவியோ விஷ்ணுவை பெரியவர் என்றார்... இதனால் கோபமுற்ற கணவன் சதுரகிரியில் சிவனை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தவம் செய்ய ஆர்ம்பித்தார்...அவரின் தவத்தை பார்த்து வியந்த சிவனோ அவருக்கு காட்சி அளித்து வரம் வழங்குவதாக கூறினார், அந்த கனவர் சிவனிடம் என் மனைவிக்கும் காட்சி அளிக்குமாறு கூறினார், பெருமான் அவரின் மனைவிக்கும் காட்சி அளிக்க, அந்த பெண்ணோ அப்போதும் விஷ்ணுவே பெரியவர் என்றார், அவளோ சிவனிடம் விஷ்ணுவை என் முன் நிறுத்தினால் உங்களை நம்புகிறேன் என்றாள்... அப்போது சிவனோ விஷ்ணுவாக காட்சி தந்து " ஹரியும் சிவனும் ஒன்று " என்று அந்த தம்பதிக்கு உணர்த்தினார்..அந்த இடம் ஹரியும் சிவனுமாக இரெட்டை லிங்கமாக காட்சி தருகின்றது...
சித்தர்கள் வாழும் சதுரகிரி:
சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் காற்றில் உலா வருவதாக நம்புகின்றனர்..
சதுரகிரியில் பதினெட்டு சித்தர்கள் வழிபட்டாதாகவும் அவர்கள் இங்கு வந்து பூஜைகள் தவங்கள் செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது, பதினெட்டு சித்தர்கள் பெயர்கள் பின் வரிசை படுத்தியுள்ளேன்..இந்த சித்தர்களின் வரலாறு சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் சுவற்றில் வரையப்பட்டுள்ளது...
1.இடைக்காடர்
2.சட்டைநாதர்
3.கருவூரார்
4.கொங்கணர்
5.குதம்மை சித்தர்
6.பாம்பாட்டி சித்தர்
7.சுந்தரனந்தார்
8.பதஞ்சலி
9.போகர்
10.சிவவாக்கியர்
11.தன்வந்தரி
12.வான்மீகர்
13.கோரக்கர்
14.கமலமுனி
15.மச்சமுனி
16.திருமூலர்
17.இராமதேவர்
18.அகத்தியர்
மேலே குறிப்பிட்டுள்ள 18 சித்தர்களும் சதுரகிரியை தரித்து தவம் செய்த சித்தர்கள் ஆவர்...
போகரும் சதுரகிரியும்:
பழனியில் உள்ள முருகருடைய நவபாஷாண சிலையானது நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகைகளால் ஆனது, இந்த மூலிகைகளை சதுரகிரி மலையில் இருந்தே எடுக்கப்பட்டு முழுக்க முழுக்க சதுரகிரி மலையிலே செய்யப்பட்டது தான் இந்த நவபாஷாண சிலை என்பது முக்கியமானது...
என் பயணம்
பிரதோஷம், பெளர்ணமி இரண்டும் தொடர்ந்து வந்ததால் தொடர்ந்து நான்கு நாட்கள் சதுரகிரி மலை ஏற அனுமதி என்றதால் நானும் எங்கள் நண்பர்களும் சதுரகிரி மலை ஏற முடிவெடுத்து வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து விருதுநகர் சந்திப்பிற்கு சென்றோம்... விருதுநகர் பேருந்து நிலையத்தை நடந்தே சென்றோம், விருதுநகர் பேருந்து நிலையத்தில் காலை 6.00 மணிக்கு வர்தாப்/ வர்தாயிருப்பு எனும் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி தாணிப்பாறை செல்லும் வழிக்கு சென்றோம், அங்கிருந்து தாணிப்பாறை எனும் சதுரகிரி மலை அடிவாரம் செல்ல ஆட்டோ மூலம் சென்று அங்கேயே ஆணை மலை சித்தர் அன்னதான நிலையத்தில் சாப்பிட்டு காலை 8.15க்கு மலை ஏற ஆரம்பித்தோம்...
போகும் வழியில் வினாயகர் கோவிலில் வினாயகரை வழிபட்டு அருகில் உள்ள நீரோடையில் குளித்துவிட்டு காலை 9.00 மணிக்கு மலை ஏற தொடங்கினோம்...
2000 மேற்பட்ட சிமெண்ட் படிகளை கடக்கும் போது மாங்கனி நீரோடை, வழுக்குப்பாறை, சங்கிலி பாறையை அடைந்தோம், மிகவும் செங்குத்தாக ஏறும் முக்கோணவளைவு எனும் இடத்தில் இருந்து மேலும் மலை ஏற ஆரம்பித்தோம்...காராம் பசுத்தடம், கோரக்கர் தவம் செய்த இடம் ஆகியவற்றை கடந்து இரட்டை லிங்கம் கோவிலை அடைந்தோம், அதாவது மலை ஏற்றத்தின் பாதி தூரத்தை அடைந்தோம், பின் வனதுர்கை கோவில் பச்சரிசி பாறை ஆகியவற்றை கடந்து சதுரகிரியின் காவல் தெய்வமாகிய பிலாவடி கருப்புசாமியை வணங்கினோம், அங்கும் குளிக்க பெரிய நீரோட அமைந்துள்ளது, அருகில் தைல கிணறு அமைந்துள்ளது, இதனை தொடர்ந்து மலை ஏறினால் கடைத்தெருவை அடைந்தோம், அங்கு பூஜை பொருட்கள், மலை சாம்பிராணி, குடிக்க தயிர், சோடா, டீ போன்றவை விற்கப்படுகின்றது..
அதனை தொடர்ந்து சுந்தரமாகலிங்க கோவிலை அடைந்தோம் நாங்க சரியாக. 11.45க்கு சன்னதியை அடைந்தோம், 12 மணி பூஜையான உச்சி பூஜைக்காக நடை மூடப்பட்டது, சரியாக 12.00 மணிக்கு பால், இளநீர், தேன், வீபூதி போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது, கடிடமான மலை ஏறிய வந்த உடல் சோர்வு நொடியில் தீர்ந்தாக உணர்ந்தோம், பின் அபிஷேகம் முடிந்ததும் முழு அலங்காரகத்துடன் உச்சிகால பூஜை நடந்தது, நமசிவாய என்ற மந்திரத்தை பக்தர்களின் சத்தமும் சங்கு இசையாலும் எங்களை அறியாத ஓர் உணர்வை அனுபவித்தோம் வியந்தோம்... பின் அங்கிருந்து சந்தன மாகலிங்கம், மற்றும் சித்தர்களின் சன்னதிகளை வணங்கினோம், மணி சரியாக 1.00க்கு கோவில் வளாகத்தில் போடப்பட்ட அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டோம்,.. சரியாக மதியம் 1.30 மணிக்கு மலை இறக்க தொடங்கினோம்...மலையில் இறங்கும் போது ஓய்வின்றி இறங்கினோம் மலை அடிவாரத்தை மாலை 4.00 மணிக்கு அடைந்தோம்... பின் அங்கிருந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள்/நாச்சியார் ஆலயத்தில் ஆண்டாள் ஆழ்வாரை தரிசித்தோம், தமிழ்நாடு அரசின் முத்திரையான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரத்தை கண்டு வியந்தோம், மீண்டும் அங்கிருந்து விருதுநகர் இரயில் நிலையத்தை அடைந்து விழுப்புரம் இரயில் நிலையத்தை காலை 4.00 மணிக்கு அடைந்தோம், காலை 4.30க்கு வீட்டை அடைந்தோம்... இந்த மலை ஏற்றமும் மன நிம்மதியுடன் முடிவடைந்தது.. மீண்டும் அடுத்த சவால் நிறைந்த மலைகளில் பயணித்து அதன் அனுபவத்தை பதிவிடுகின்றேன்...
சதுரகிரி மலையை பற்றியும் எங்கள் அனுபவம் ஆகியவை உங்களுக்கு படிக்கும் என நம்புகின்றேன் நன்றி ..
நன்றி,
தொகுப்பு : தமிழரசன் சண்முகம்
வெளியீடு : செந்தமிழ் தென்றல்
Some Photos