வணக்கம் நண்பர்களே,
குலதெய்வம் , சாகை வார்த்தல் என்று அழைக்கப்படும் அம்மனுக்கு கூழ் படைப்பது என்பதும் ஞாபகம் வருவது ஆடி மாதம் வெள்ளி கிழமை , அந்த ஆடி வெள்ளியை பற்றி இந்த ஆடி முதல் வெள்ளியில் சிறு பதிவு..
கொரோனா தொற்றின் முதல் அலையில் பாதிக்கப்பட்டிருந்த மக்களால் கடந்த வருடம் ஆடி மாத திருவிழாக்கள் நடைபெறாமலும் குலதெய்வ கோவில் வழிபாடு செய்யாமல் மக்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்தனர்...
இரண்டாம் அலை தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலால் தற்போது ஆடி வெள்ளி தினமான இன்று அனைத்து கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்தும் கூழ் படைத்தும் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தினர்.
ஆடி வெள்ளியும் குலதெய்வமும்:
ஆடி வெள்ளி அம்மன் கோவிலுக்கு மிகவும் விசேஷ நாள், ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து குடும்பங்களும் குடும்பத்தோடு ஆடி மாதம் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நடைமுறையாகும்..
குல தெய்வம் கோவில் சென்று வழிபாடு நடத்துவது என்பது ஒரு அருமையான அனுபவமாகும்..
ஆடி மாதம் வெள்ளி அன்று குல தெய்வம் கோவிலுக்கு போவதற்கு முன் கூட்டியே பல திட்டங்களை ஏற்பாடுகளையும் செய்வார்கள் பெரியோர்கள்..
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் வழிபாடு நடத்தவே ஆடி வெள்ளியில் நடைபெறும் திருவிழாவிற்கு குலதெய்வம் கோவிலுக்கு செல்கின்றனர்..
ஒரு ஊரே திரண்டு தங்களின் குலதெய்வம் கோவிலை நோக்கி பயணிக்கும் போது குழந்தைகள் ஏதோ சொர்க்கத்தை நோக்கி பயணிப்பது போலும், பெரியவர்கள் இந்த வருடமாவது ஏதாவது நல்லது நடக்காதா என்ற நம்பிக்கையிலும் குலதெய்வம் கோவிலை நோக்கி செல்கின்றனர்..
கிடைத்த விறகுகளில் அம்மா பொங்கல் வைக்க அப்பா எடுத்து வந்து கொடுக்கவும் , அம்மா அடுப்பை பற்ற வைத்து பொங்கல் செய்ய ஆரமிப்பதுமாய் குலதெய்வ வழிபாடு தொடங்குகிறது, குழந்தைகள் நண்பர்களுடன் பலூன் வாங்கியும், ஐஸ் கிரீம், பொறியை வாங்கி சுவைத்தும் விளையாட்டுடன் கோவிலை சுற்றி திரிவார்கள்...
அம்மா வைத்த பொங்கல், மாவு விளக்குடன் அம்மனை தரிசித்து படையல் இடுவார்கள், பின் படைத்த படையலை குடும்பத்துடன் சாப்பிட்டு கோவிலின் மண்டபத்திலே சற்று ஓய்வேடுத்து இரவு நடைபெறும் தீமிதி திருவிழா மற்றும் அம்மன் வீதி உலாவிற்காக காத்திருந்து அம்மனை தரிசித்து, ஊர் மக்கள் மற்றும் பங்காளிகளுடன் வான வேடிக்கை மற்றும் தெருக்கூத்தை பார்த்து பின் இரவில் தங்கள் உறவினர்களுடன் வீடு திரும்பும் அற்புத அனுபவம் தரும் ஆடி மாசம்...
தற்போது நகரத்திற்கு சென்ற பல குடும்பங்கள் தங்களின் குலதெய்வத்தின் பெயர்களையே மறந்துவிட்டனர் என்பது மேலும் கவலை அடைய வைக்கிறது..
கொரோனாவை மறந்து கொரோனா முற்றிலும் அழிய வேண்டும் என்று இந்த ஆடி மாத வெள்ளியில் அம்மன் கோவில் நடைபெறும் வழிபாட்டில் கடவுளை வேண்டிக்கொள்வோம்...
நன்றி,
தயாரிப்பு : தமிழரசன் சண்முகம்